சாவியை விழுங்கிய வாலிபர்: 10 கிலோ வாழைப்பழம் கொடுத்து மீட்ட போலீசார்!

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக்(எ) ராமு (வயது 23). இவர் பெங்களூருவில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். மாதநாயக்கனஹள்ளி பகுதியில் தங்கியிருந்த அவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்த காதலை அறிந்த சிறுமியின் பெற்றோர், கார்த்திக்கை கண்டித்துள்ளனர். இந்த நிலையில் சிறுமியை அழைத்துக்கொண்டு கார்த்திக் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். இதனால் சிறுமியின் பெற்றோர், தங்களது மகளை கார்த்திக் கடத்திச் சென்றுவிட்டதாக மாதநாயக்கனஹள்ளி போலீசில் புகார் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து பல்லாரியில் பதுங்கியிருந்த 2 பேரையும் போலீசார் மீட்டு பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர். பின்னர் கார்த்திக்கை போலீசார் மாதநாயக்கனஹள்ளி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது தன் மீது போலீசார் ‘போக்சோ’ வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து விடுவார்கள் என பயந்து, கையில் இருந்த லாக்கர் சாவியை (சிறிய சாவி) திடீரென்று வாயில் போட்டு விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், உடனே கார்த்திக்கை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலில் மருத்துவ பரிசோதனை செய்தனர். அதில் கார்த்திக் விழுங்கிய சாவி தொண்டையில் சிக்காமல் வயிற்றில் சிக்கி இருப்பதை கண்டறிந்தனர். இதனால் வயிற்றுக்குள் கிடந்த சாவியை மீட்க வாழைப்பழங்களை சாப்பிட கொடுக்கும்படியும், இவ்வாறு செய்தால், அந்த சாவி இயற்கை உபாதை மூலம் வெளியே வந்துவிடும் என்றும் டாக்டர்கள் போலீசாரை அறிவுறுத்தினர். அதன்படி போலீசாரும் கார்த்திக்கை வலுக்கட்டாயப்படுத்தி வாழைப்பழங்களை சாப்பிட வைத்துள்ளனர். மொத்தம் 10 கிலோ வாழைப்பழங்களை போலீசார் அவரை சாப்பிட வைத்துள்ளனர். அதன்பிறகு இயற்கை உபாதை மூலம் கார்த்திக் விழுங்கிய சாவி வெளியே வந்தது. இதனால் போலீசார் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.