கபில சந்திரசேனவை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ்.போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
முன்னதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதன் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் பிணையை இரத்துச் செய்யுமாறு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.
கபில சந்திரசேனவின் பிணையை இரத்துச் செய்து, வழக்கு விசாரணை முடியும் வரை அவரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு ஆணைக்குழு கோரியிருந்தது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும் கொடுக்கல் வாங்கலில், சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்று இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கபில சந்திரசேனவுக்குக் கடந்த சில நாள்களுக்கு முன்னரே பிணை வழங்கப்பட்டிருந்தது.
கபில சந்திரசேன தனக்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளை மீறியுள்ளார் என்றும், இதன் மூலம் நீதிமன்றத்தின் நம்பிக்கையை அவர் சீர்குலைத்துள்ளார் என்றும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருந்தது.
எனவே, அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான பிடியாணை ஒன்றையும் பிறப்பிக்குமாறு ஆணைக்குழு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
