‘சொக்லேட்’ வடிவில் கடத்தப்பட்ட 4 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ – கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞர் ஒருவர் கைது.

விமான நிலையத்தின் ஊடாகப் பாரியளவிலான ‘ஹசீஸ்’ போதைப்பொருளைக் கடத்தி வர முயன்ற கொழும்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கையும் மெய்யுமாகப் பிடிபட்டார்.

கைது செய்யப்பட்ட 24 வயதுடைய சந்தேகநபர் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையின் சர்வதேச சந்தைப் பெறுமதி சுமார் 4 கோடியே 77 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தனது பயணப் பொதியினுள் மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தார். அதிகாரிகளை ஏமாற்றும் நோக்கில், சொக்லேட் போன்று பொதி செய்யப்பட்ட 15 உறைகளுக்குள் இந்த ‘ஹசீஸ்’ போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை சோதனையின்போது அம்பலமானது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட போதே போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இவரைக் கைது செய்தனர்.

சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்போது, மேற்படி இளைஞரைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான உத்தரவைப் பெற்று, இந்தப் போதைப்பொருள் கடத்தலுக்குப் பின்னால் இருக்கும் ஏனைய நபர்களைக் கண்டறிய மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.