“மே 18 இல் வீடெங்கும் சுடர் ஏற்றுங்கள்!” – வல்வெட்டித்துறையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அறைகூவல்.

முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூரும் “முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்”, யாழ். பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினால் இன்று வல்வெட்டித்துறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வல்வெட்டித்துறை, ஆலடிப் பகுதியில் ஒன்றுகூடிய மாணவர்கள், போரில் உயிரிழந்த மக்களுக்காகச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். இவர்களுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்து கண்ணீர் மல்கத் தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.

இறுதிப் போரின் அவலங்களை நினைவுகூரும் வகையில், மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு அங்கிருந்த பொதுமக்களுக்குப் பரிமாறப்பட்டது. வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான கஞ்சி வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக மாணவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விடுத்துள்ள விசேட வேண்டுகோளில்,

“எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி, தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்க வேண்டும்.

அன்றைய தினம் அனைத்து வீடுகள், வர்த்தக நிலையங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத்தளங்களில் சுடரேற்றி உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்.” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.