காவி உடையில் போதைப்பொருள் கடத்தல்: 23 பிக்குகளுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

தாய்லாந்தில் இருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹாஷ்’ போதைப்பொருள்களைக் கடத்தி வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகளையும், எதிர்வரும் மே மாதம் 26 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதிவான் சுபாணி அபேசேகர நேற்று உத்தரவிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி தாய்லாந்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்த இந்தப் பிக்குகள், அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டனர். அவர்களது பயணப் பொதிகளைச் சோதனையிட்ட போது, சுமார் 112 கிலோகிராம் எடையுள்ள ‘குஷ்’ மற்றும் ‘ஹாஷ்’ போதைப்பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், இந்தப் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை அமிதானந்த எனும் பெயருடைய பிக்கு ஒருவரே திட்டமிட்டு ஒருங்கிணைத்துள்ளார் என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவர், பின்னர் கம்பஹா பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

தாய்லாந்துக்குச் சுற்றுலாச் சென்றுவிட்டுத் திரும்பிய போதே இவர்கள் இந்தக் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே, அவர்களின் விளக்கமறியல் காலத்தை நீடித்து நீதிவான் உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.