இந்த அரசுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லையாம் – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஹர்ஷ டி சில்வா எம்.பி.

தான் அரசுடன் இணையப்போவதாகப் பரப்பப்படும் வதந்திகளை முற்றாக நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறுகிய அரசியல் இலாபங்களுக்காகத் தான் அரசியல் முடிவுகளை எடுப்பதில்லை என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“எனது குடும்ப உறுப்பினர்கள் எவரும் அரசியலில் ஈடுபடவில்லை. இலங்கையை ஒரு வளர்ந்த நாடாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசையிலேயே நான் பொதுவாழ்வுக்கு வந்தேன்.

எதிரணி முகாமில் இருந்து என்னை வெளியேற்றச் சில குழுக்கள் முயற்சிக்கின்றன. ஆனால் அது ஒருபோதும் நடக்காது.

தற்போதைய அரசு ஒரு தோல்வியடைந்த அரசு. இந்த அரசுக்கு எதிர்காலப் பொருளாதாரக் கண்ணோட்டம் கிடையாது.

உலகுக்குத் திறக்கப்படாத, குறுகிய மற்றும் மூடிய கருத்துக்கள் மூலம் நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது.

அரசுடன் இணைவது குறித்து நான் எவருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இவ்வாறான ஊகங்கள் மூலம் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவுகளை ஏற்படுத்தச் சிலர் முயற்சிக்கின்றனர்.

எல்லாவற்றையும் எதிர்ப்பதற்குப் பதிலாக, நல்ல முடிவுகளுக்கு ஆதரவளிக்கும் புதிய அரசியல் கலாசாரத்தை நான் ஊக்குவிக்கின்றேன். நாட்டுக்காக எந்தவொரு பாரிய பொறுப்பையும் ஏற்கத் தயாராக இருக்கின்றேன். இலங்கைக்கு ஒரு புதிய யுகம் தேவை.

பொருளாதார ரீதியாகச் செழிப்பான இலங்கையை உருவாக்கும் நோக்கில், அரசுக்கு எதிரான எனது அரசியல் போராட்டத்தை எதிர்வரும் நாட்களில் தீவிரப்படுத்தவுள்ளேன்.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.