தமிழகத் தேர்தலில் வாக்களித்த இலங்கையர் உட்பட மூவர் கைது! – சென்னை விமான நிலையத்தில் சிக்கிய ‘மை’ அடையாளம்.

நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்தும் விதிகளுக்குப் புறம்பாக வாக்களித்த இலங்கை, கனடா மற்றும் ஆஸ்திரேலியப் பிரஜைகள் மூவர் மீது இந்தியப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வாக்களித்துவிட்டு மீண்டும் வெளிநாடுகளுக்குத் திரும்புவதற்காகச் சென்னை விமான நிலையம் வந்தபோது, குடிவரவு அதிகாரிகளிடம் இவர்கள் சிக்கியுள்ளனர்.

இவர்களது கை விரலில் இருந்த அழியாத தேர்தல் மையைக் கண்ட அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இவர்கள் வெளிநாட்டுப் பிரஜைகளாக இருந்தும் தேர்தலில் வாக்களித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கனடாப் பிரஜை

சென்னை அசோக் நகரைப் பூர்வீகமாகக் கொண்டு, தற்போது கனடாவில் வசித்து வரும் ஐ.டி. ஊழியர் ஒருவர், தனது சகோதரர் திருமணத்துக்காக வந்திருந்தபோது தி.நகர் தொகுதியில் வாக்களித்துள்ளார். இவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஆஸ்திரேலியப் பிரஜை

விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற ஒருவர், விருகம்பாக்கம் தொகுதியில் வாக்களித்தமைக்காக விருகம்பாக்கம் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இலங்கைப் பிரஜை

இதேபோல், இலங்கைக் குடியுரிமை பெற்ற ஒருவர் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்களித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவர் மீது கொடுங்கையூர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற பின்னரும் இவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகின் றது.

வாக்காளர் அடையாள அட்டை கைவசம் இருந்ததால் அதனைப் பயன்படுத்தி ஓட்டுப் போட்டதாகச் சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) வேட்பாளர் வெறும் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இவ்வாறான வெளிநாட்டுப் பிரஜைகளின் வாக்குகள் தேர்தல் முடிவுகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் எனச் சமூக ஆர்வலர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.