எங்கள் கண்ணீரின் மௌன சாட்சியே இந்த நந்திக்கடல் – மலர் தூவி, சுடரேற்றி ரவிகரன் எம்.பி. உருக்கமான உரை.

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நந்திக்கடல் பகுதியில் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினார்.

போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான உறவுகளைக் காவுகொண்ட நந்திக்கடல் கரையில் இன்று காலை மலர் தூவியும், சுடர் ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இறுதி மூச்சு வரை விடுதலைக்காகப் போராடிய மற்றும் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

அஞ்சலி நிகழ்வின் பின் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்,

“எமது பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌன சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளோம்.”- என்று உருக்கத்துடன் தெரிவித்தார்.

நந்திக்கடல் அஞ்சலியைத் தொடர்ந்து, வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காக விசேட பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வுகளில் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, இரத்தினம் ஜெகதீசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.

17 ஆண்டுகள் கடந்தும், நீதிக்காகக் காத்திருக்கும் தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று நினைவேந்தல்கள் எழுச்சியுடன் இடம்பெற்றன.

Leave A Reply

Your email address will not be published.