கரடியனாறு பொலிஸ் சிறைக்கூடத்தில் கைதி மரணம்! – கசிப்பு வழக்கில் கைதானவர் இன்று அதிகாலை சடலமாக மீட்பு.
கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் இன்று சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கித்துள் பாடசாலை வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய சுப்பையா சாந்தகுமார் என்பவரே இவ்வாறு சிறைக்கூடத்தில் உயிரிழந்தவராவார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில், 1,500 மில்லிலீற்றர் சட்டவிரோத கசிப்புடன் சந்தேகநபரைக் கரடியனாறு பொலிஸார் கைது செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று சனிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் சிறைக்கூடத்துக்குள் ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெறும் நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
