பத்தரமுல்லை நினைவுத் தூபி விவகாரம்: விமல் கைதாகிப் பிணையில் விடுவிப்பு!
பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய படையினர் நினைவுத் தூபி பகுதியில் பொலிஸாரின் கடமைகளுக்குப் இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் இன்று திங்கட்கிழமை முற்பகல் கைது செய்யப்பட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச, கடுவல நீதிவான் நீதிமன்றத்தால் பிற்பகல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பத்தரமுல்லையில் தேசிய படையினர் நினைவுத் தூபி பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, நேற்று ஞாயிற்றுக்கிழமை தலங்கம பொலிஸ் நிலையத்துக்குச் சமூகமளிக்குமாறு விமல் வீரவன்சவுக்குப் பொலிஸாரால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், நேற்று அவர் சமூகமளிக்கத் தவறியதைத் தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு மீளவும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதற்கமைய, இன்று காலை தலங்கம பொலிஸ் நிலையத்துக்குச் சென்று வாக்குமூலம் அளித்தமையைத் தொடர்ந்தே அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த மே மாதம் 18ஆம் திகதி, ரணவிரு நினைவுத் தூபி வளாகத்தில் ‘போர் வெற்றி நாள்’ நினைவுச் சின்னக் கொண்டாட்டங்களுக்கான உத்தியோகபூர்வ ஒத்திகைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இதன்போது, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர், உரிய அனுமதியின்றி அந்த நினைவுத் தூபி வளாகத்துக்குள் பலவந்தமாக நுழைவதற்கு முற்பட்ட வேளையில், அங்கிருந்த பொலிஸாருக்கும் அக்குழுவினருக்கும் இடையே கடுமையான பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
அரச அதிகாரிகளின் ஒத்திகை நடவடிக்கைகளுக்கும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கும் இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ், விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் அன்றைய தினமே அறிவித்திருந்தனர்.
இன்று காலை கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச, தலங்கம பொலிஸாரால் கடுவல நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரைத் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிப்பதற்கான உத்தரவை நீதிவான் பிறப்பித்துள்ளார்.
