போதைப்பொருள் வேட்டையில் திங்கள் மட்டும் 1,069 பேர் கைது!

ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கு அமைய, நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ் நேற்று திங்கட்கிழமை நாடு தழுவிய ரீதியில் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தச் சுற்றிவளைப்புகளில் ஒட்டுமொத்தமாக 1,069 சந்தேகநபர்கள் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் பொலிஸாரால் நடத்தப்பட்ட 1,071 விசேட சோதனைகளின் போதே 1,069 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 8 பேர் நீதிமன்றத் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீவிர போதைக்கு அடிமையாகியுள்ள நால்வர் மேலதிக புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதன்படி, சந்தேகநபர்களிடமிருந்து ஒரு கிலோகிராம் 572 கிராம் ஹெரோயின், 962 கிராம் ஐஸ், 44 கிராம் கொக்கெய்ன், ஒரு கிலோகிராம் 119 கிராம் கஞ்சா, 7 ஆயிரத்து 8 கஞ்சா செடிகள், 28 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 74 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 1,020 போதை மாத்திரைகள், 93 கிராம் மதனமோதகம் மற்றும் 7 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.