பருத்தித்துறை கடலில் மாயமான தந்தை, மகன் உட்பட 4 மீனவர்களைத் தேடும் பணி தீவிரம்! – கடற்படை, அமைச்சரின் அலட்சியத்தால் மக்கள் கொந்தளிப்பு.
யாழ். பருத்தித்துறை மற்றும் கற்கோவளம் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று காணாமல்போன தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாததால் உறவினர்கள் பெரும் தவிப்பில் ஆழ்ந்துள்ள நிலையில், அவர்களை மீட்பதில் கடற்படையினரும் கடற்றொழில் அமைச்சரும் காட்டிவரும் அசமந்தப்போக்கு அப்பகுதி மக்களிடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு பருத்தித்துறை – முனை மற்றும் கற்கோவளம் பகுதிகளில் இருந்து இரண்டு தனித்தனிப் படகுகளில் கடலுக்குச் சென்ற நான்கு மீனவர்களே இவ்வாறு பலத்த காற்று மற்றும் கடற்கொந்தளிப்பில் சிக்கிக் காணாமல்போயுள்ளனர்.
பருத்தித்துறை முனை கடற்றொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த கதிர்காமம் சோதிலிங்கம் (வயது 52), சுமியோம்பிள்ளை சுஜிக்குமார் (வயது 37) ஆகியோரும், கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரமூர்த்தி இராமகிருஸ்ணன் (வயது 54) மற்றும் அவரது மகனான இராமகிருஸ்ணன் ரவிராஜ் ஆகியோருமே இவ்வாறு கடலில் காணாமல்போயுள்ளனர்.
காணாமல்போன தங்களது சக நண்பர்களைத் தேடி உள்ளூர் மீனவர்கள் பல படகுகளில் நேற்று வியாழக்கிழமையிலிருந்து ஆழ்கடலுக்குச் சென்று தீவிர தேடுதலில் ஈடுபட்ட போதிலும், அவர்கள் ஏமாற்றத்துடனேயே கரை திரும்பியுள்ளனர்.
எனினும், தேடுதலில் ஈடுபட்ட மூன்று படகுகள் கரை திரும்பிய போது, கடலில் மிதந்த ஒரு பகுதி வலைத்துண்டுகளை மீட்டு வந்துள்ளனர். அவ்வாறு மீட்கப்பட்ட வலைகள், கற்கோவளத்தில் இருந்து தந்தை மற்றும் மகனால் கொண்டு செல்லப்பட்ட படகின் வலைகள் தான் என சக மீனவர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனால் படகு கவிழ்ந்திருக்கலாம் என்ற அச்சம் மேலும் அதிகரித்துள்ளது.
மீனவர்கள் காணாமல்போனமை குறித்துக் கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறைப் பிரதிப் பணிப்பாளர் ஆகியோருக்கு உடனடியாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும், இலங்கை கடற்படையினர் இதுவரை எவ்விதத் தேடுதல் அல்லது மீட்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை எனப் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்கள் மற்றும் பிராந்திய கடற்றொழிலாளர் சங்கங்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சம்பவ இடத்துக்கு நேரில் வருகை தந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் மீனவ சங்கப் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது, சம்பவ இடத்திலிருந்து கடற்றொழில் அமைச்சரை அவர் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற போதிலும், அமைச்சர் அழைப்பை ஏற்காது புறக்கணித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் மாவட்டப் பணிப்பாளர் ஆகியோரைத் தொடர்புகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், அவசர மீட்புப் பணிகளை முடுக்கிவிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்த விஜயத்தின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் மற்றும் கற்கோவளம், முனை மீனவர் சங்கப் பிரதிநிதிகள் பலரும் உடனிருந்தனர். காணாமல்போன மீனவர்களைப் பாதுகாப்பாக மீட்கக் கோரி பருத்தித்துறை கடற்கரையில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.


