போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: நேற்று மாத்திரம் 867 பேர் சிக்கினார்கள்.

‘முழு நாடுமே ஒன்றாக’ எனும் நாடளாவிய ரீதியிலான தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்திற்கமைய, நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட விசேட அதிரடிச் சுற்றிவளைப்புகளில் மாத்திரம் 867 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

‘முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’ என்ற தொனிப்பொருளின் கீழ், கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் இந்த விசேட போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒருகட்டமாக, நேற்று நாடு முழுவதும் சுமார் 866 விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளைப் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்திருந்தனர். இதன்போதே மேற்படி 867 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய விசேட சோதனைகளின் போது அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களின் விவரங்களைக் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. அதன்படி,

* ஐஸ் போதைப்பொருள்: 5 கிலோ கிராம் 694 கிராம்
* ஹெரோயின்: 1 கிலோ கிராம் 308 கிராம்
* கஞ்சா: 1 கிலோ கிராம் 105 கிராம்
* போதை மாத்திரைகள்: 2,891 மாத்திரைகள்

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுள் விநியோகஸ்தர்களாகச் செயற்பட்ட 7 பிரதான சந்தேகநபர்களுக்கு எதிராகப் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேல்நீதிமன்றில் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுத் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கைதானவர்களில் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு எதிராக, போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த சட்டவிரோத சொத்துக்குவிப்பு தொடர்பான விசேட விசாரணைகளை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

மேலும், நேற்றைய சோதனைகளின் போது போதைப்பொருளுக்குக் கடுமையாக அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்ட இரு நபர்கள், நீதிமன்ற உத்தரவின் பேரில் முறையான மருத்துவ மற்றும் உளவியல் ஆலோசனைகளுக்காகப் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.