கொலையில் முடிந்த குடும்பத் தகராறு!

குருநாகல் மாவட்டம், பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னில பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற குடும்பத் தகராறில், கணவனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு 61 வயதுடைய பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான 59 வயதுடைய அவரது கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்துப் பொலிஸ் தரப்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது:-

பன்னில பிரதேசத்தில் வசித்துவந்த இந்தத் தம்பதியினருக்கு இடையே நேற்று கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது சினமடைந்த கணவன், வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்துத் தனது மனைவியைக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபரான கணவனைப் பிங்கிரிய பொலிஸார் உடனடியாகக் கைது செய்தனர். எனினும், பொலிஸ் காவலில் இருந்த போது அவருக்குத் திடீரெனக் கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் பொலிஸாரால் உடனடியாகப் பிங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் மற்றும் சந்தேகநபரின் திடீர் மரணம் தொடர்பில் பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.