உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி ஓகஸ்டில் நடக்கும் – எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்கப்படாது என்று அரசு அறிவிப்பு.

2026 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திகதிக்கமையவே நடைபெறும் என்றும், அதனை எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி கிரியெல்ல எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதி அமைச்சர் இதனை நாடாளுமன்றத்துக்குத் தெளிவுபடுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இது குறித்துக் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி கிரியெல்ல,

“பல்கலைக்கழக அனுமதிக்கு பிரதானமான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்முறை முதன்முறையாகப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்குப் பாடத்திட்டங்களை முழுமைப்படுத்த வெறும் 20 மாத காலமே கிடைத்துள்ளது. கடந்த காலங்களில் இதற்காக 27 முதல் 31 மாதங்கள் வரை அவகாசம் இருந்தது. அத்துடன், கடந்த வருடம் நிலவிய சீரற்ற காலநிலையால் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டமையால், பரீட்சையை 2 அல்லது 3 மாதங்களுக்குப் பிற்போடுமாறு மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அதேபோன்று, இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கும் வழமையாகப் பெறுபேறுகள் வெளியாகி அடுத்த பரீட்சைக்குத் தயாராக 6 மாத காலம் கிடைக்கும். ஆனால், இம்முறை அவர்களுக்கு 4 மாதங்களே கிடைத்துள்ளமையால், மாணவர்களின் நலன் கருதிப் பரீட்சையை ஒத்திவைத்து கால அவகாசம் வழங்க வேண்டும்.” – என்று வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன,

“உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி ஒருசில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இது குறித்துப் பரீட்சைகள் திணைக்களத்துடன் தொழில்நுட்ப ரீதியிலான விரிவான கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன. கோவிட் பெருந்தொற்று காலப்பகுதியில் இருந்து நாட்டின் பிரதான தேசிய பரீட்சைகள் இரண்டும் (உயர்தரம் மற்றும் சாதாரண தரம்) கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கால அட்டவணைகள் சீர்குலைந்துள்ளன.

இவற்றை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டு வராவிட்டால், அது ஏனைய பள்ளிப் பரீட்சைகளையும், பல்கலைக்கழகப் பரீட்சைகளையும் சங்கிலித் தொடராகப் பாதிக்கும். எனவே, கடந்த காலங்களில் பிற்போடப்பட்ட தேசிய பரீட்சைகளை உரிய காலத்தில் நடத்தி, கல்வித்துறையை வழமைக்குக் கொண்டுவர அரசு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கால அட்டவணைப்படியே இம்முறை உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடத்தப்படும்.” – என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.