சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக ஜனாதிபதிக்கு அவசர கடிதம் – 9 முன்னாள் எம்.பிக்கள் கையெழுத்து.

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கு ஆதரவாகவும், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, சட்டத்தரணி டிலான் பெரேரா, டி.பி. ஹேரத், கலாநிதி குணபால ரத்னசேகர, கரு கொடிதுவக்கு, வைத்தியர் திலக் ராஜபக்ஷ, வைத்தியர் உபுல் கலப்பத்தி, லலித் எல்லாவல மற்றும் கே.பி.எஸ். குமாரசிறி ஆகிய 9 பேர் இந்தக் கடிதத்தில் கூட்டாகக் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“முன்னர் பொலிஸ் காவலில் இருந்த உங்களது கட்சியின் (ஜே.வி.பி.) ஸ்தாபகர் ரோஹண விஜேவீர படுகொலை செய்யப்பட்டு, உயிர் பிரிவதற்கு முன்பாகவே மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்ட அந்தக் காட்டுமிராண்டித்தனமான யுகத்தின் கொடூரமான வடுக்கள், இந்த ஜனநாயக நாட்டில் மீண்டும் ஒருபோதும் பதிவாகக் கூடாது என்பதே அனைவரினதும் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

எனவே, ஜனாதிபதி முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து உண்மைகளையும் சமநிலையான மற்றும் பாரபட்சமற்ற முறையில் ஆய்வு செய்ய வேண்டும். முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பிரதானி சுரேஷ் சலேவையும் ஒரு சாதாரண சந்தேகநபராகக் கருதி, அவருக்கான சட்டத்தின் சமத்துவத்தை உறுதிப்படுத்துவதில் விசேட கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.