கணவர் உயிரோடு இருக்கும் வரை ‘குடும்ப ஓய்வூதியத்தில்’ மனைவிக்கு உரிமை இல்லை: ராஜஸ்தான் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு!

ஜெய்ப்பூர்,

ஓய்வூதியம்
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு இடையே குடும்பத் தகராறு நீடித்து வந்தது. கணவர் அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்று, ஓய்வூதியம் பெற்று வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக, தனது எதிர்கால பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அந்தப் பெண் ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

அதில், “எனது கணவரின் குடும்ப ஓய்வூதியப் பலன்களுக்கு என்னை அதிகாரப்பூர்வ வாரிசுதாரராக நிய மிக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த ராஜஸ்தான் ஐகோர்ட்டு, மனைவியின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஐகோர்ட்டு தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
அரசு ஊழியரான கணவர் உயிருடன் இருக்கும் வரை, குடும்ப ஓய்வூதியம் என்ற கேள்விக்கே இடமில்லை. ஓய்வூதியம் என்பது தற்போதைய நிலையில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியரின் தனிப்பட்ட உரிமை ஆகும். அரசு ஊழியர் தனது பணிப் பதிவேடுகளில் சட்டவிதிகளின்படி யாரை வாரிசுதாரராக நியமிக்க வேண்டும் என்பது அவருடைய உரிமை அல்லது அரசு சேவை விதிகளுக்கு உட்பட்டது.

குடும்ப ஓய்வூதியம் என்பது ஒரு அரசு ஊழியர் மரணமடைந்த பிறகு, அவரது குடும்பத்தைக் காப்பதற்காக அரசு வழங்கும் ஒரு சமூகப் பாதுகாப்பு பலன் ஆகும். எனவே, கணவன் உயிருடன் இருக்கும்போதே, தனியாக வந்து ஐகோர்ட்டு மூலம் குடும்ப ஓய்வூதியத்தில் வாரிசு உரிமை கேட்டு மனைவி தன்னிச்சையாகப் போராட முடியாது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.