2028 இல் ஐ.எம்.எவ். திட்டத்திலிருந்து இலங்கை வெளியேறும் அபாயம்! – ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை.

https://we.tl/t-ZPq7KJ11TZJnNqWr

தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னர் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு 291 ரூபாவாகக் காணப்பட்ட போதிலும், இன்று அது 340 ரூபாவைத் தாண்டியுள்ளதுடன், மிகக் குறுகிய காலத்துக்குள் டொலரின் மதிப்பு 48 ரூபாவினால் சடுதியாக அதிகரித்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை இறக்குமதியை முழுமையாக நம்பியிருக்கும் ஒரு நாடு என்பதால், டொலர் மதிப்பின் இந்த அதீத உயர்வு காரணமாக எரிபொருள், மருந்து, அத்தியாவசிய உணவு மற்றும் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள்களின் விலைகள் உள்நாட்டில் கடுமையாக உயர்ந்துள்ளன. சர்வதேச நாணய நிதியம் அண்மையில் வெளியிட்டுள்ள மறு ஆய்வு அறிக்கையில், இலங்கையின் கடன் செலுத்தும் திறன் மற்றும் இறக்குமதிக்கான நிதித் திறன் ஆகிய இரு முக்கிய சவால்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. எனினும், இந்த இரு பிரச்சினைகளையும் கையாள்வதற்கான எவ்வித மூலோபாயத் திட்டமும் தற்போதைய அரசிடம் இல்லை.

நாணய நிதியத்தின் இலக்குகளின்படி இலங்கை வைத்திருக்க வேண்டிய கையிருப்பு 8.6 பில்லியன் டொலர்களாக இருக்க வேண்டும் என்ற போதிலும், தற்போது 6.8 பில்லியன் டொலர்களே காணப்படுகின்றது. இதன்படி வெளிநாட்டுக் கையிருப்பு பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், 2028ஆம் ஆண்டில் கடன் மறுசெலுத்தலை ஆரம்பிக்கும் போது வைத்திருக்க வேண்டிய 14 பில்லியன் டொலர் கையிருப்பில், தற்போது 1.8 பில்லியன் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் பலமுறை சுட்டிக்காட்டியதைப் போல், நாட்டுக்குப் பொருத்தமான வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய உடன்படிக்கையொன்றுக்கு அரசு செல்ல வேண்டும். தவறின், 2028 இல் இலக்குகளை அடைய முடியாமல் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற நேரிடும்.

அரசு அரிசி விலையைக் கூட கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் அதேவேளை, இக்காலப்பகுதிக்குள் 1,885 மில்லியன் டொலர்களைக் கடனாகப் பெற்றுள்ளது. எனினும், மக்களுக்கான எந்தவொரு நலன்புரித் திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் மிகவும் மந்தகதியிலேயே முன்னெடுக்கப்படுகின்றன. புயலைக் காட்டி அரசு பெருமளவு நிதியைத் திரட்டிய போதிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நட்டஈடு வழங்கப்படவில்லை.

மறுபுறம், எரிபொருள் மானியங்களை இனி வழங்க முடியாது எனத் திறைசேரி அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு போர்ச் சூழல் தணிந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், உள்நாட்டில் எரிபொருள் விலை குறைக்கப்படவில்லை. முன்னர் விலை சூத்திரம் தேவையற்றது எனக் கூறிய அரசு, தற்போது அதே விலைச் சூத்திரத்தைப் பயன்படுத்தி மக்கள் மீது வரியைச் சுமத்தியுள்ளது. வரும் ஜூலை மாதத்திலாவது எரிபொருள் விலையைக் குறைத்து மக்களுக்கு அரசு அவசர நிவாரணம் வழங்க வேண்டும்.

அரசு அரசமைப்பை மீறி, நீதிமன்ற வெற்றிடங்களை நிரப்பாமல் தனக்கு சாதகமானவர்களை உயர் பதவிகளுக்கு நியமிக்க முயற்சிப்பதுடன், தணிக்கையாளர் நாயகம் பதவிக்கும் ஜனாதிபதி தனக்கு நெருக்கமான ஒருவரை நியமிக்க முயல்கின்றார். முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனியவின் கைது மற்றும் பணிநீக்கம் தன்னிச்சையானது என மனித உரிமைகள் ஆணைக்குழுவே சுட்டிக்காட்டியுள்ளது. தற்போதைய அரசு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மூலம் தனது அரசியல் வழிகாட்டலில் தன்னிச்சையான கைதுகளை முன்னெடுத்து வருகின்றது.

அதேபோல், மாகாண சபைத் தேர்தலை அரசு அரசமைப்புக்கு முரணாகத் தொடர்ந்து ஒத்திவைத்து வருகின்றது. பழைய விகிதாசார முறையின் கீழ் ஒரே நாளில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்ட தடைகளை நீக்க அரசுக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது. தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு தேவைக்கு பயன்படுத்த முடியாது என்பதால், அரசு தேர்தலை எதிர்கொள்ளப் பயந்து ஓடக் கூடாது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.