1998 இல் மீட்கப்பட்ட செம்மணி மனித எச்சங்கள் இன்னமும் ஸ்கொட்லாந்தில் பத்திரமாக உள்ளன! – அரசு நினைத்தால் உடனே டி.என்.ஏ. பரிசோதனை சாத்தியம் என்கிறார் தமிழரசு எம்.பி. சாணக்கியன்.

https://we.tl/t-SmmrUXRO5VObxvaY

கடந்த 1998ஆம் ஆண்டு காலப்பகுதியில் செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தற்போதும் ஸ்கொட்லாந்து பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாக உள்ளன என்றும், இலங்கை அரசு நினைத்தால் உடனடியாகக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்து மீண்டும் அங்கு டி.என்.ஏ. பரிசோதனைகளை ஆரம்பிக்க முடியும் என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மேலும், இப்பரிசோதனை நடவடிக்கைகளை நோர்வே அரசு பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை, நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய அலுவலகப் பொறுப்பாளருடனான சந்திப்பில் தான் முன்வைக்கவுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 380 இற்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணாப்பட்டுள்ளன. இதன் மூலம், இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளிலேயே மிகப்பாரிய தளமாகச் செம்மணி மாறியுள்ளது. இந்தப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளை வெறுமனே அகழ்ந்து எடுப்பதோடு நிறுத்திவிடக் கூடாது. அதற்கடுத்த கட்ட நகர்வுகளை நோக்கிச் செல்ல வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் இந்த அகழ்வாராய்ச்சியால் எந்தப் பிரயோசனமும் இல்லாமல் போய்விடும்.

அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகளை முழுமையாக அடையாளம் காணும் செயல்முறையைத் தனித்து மேற்கொள்வதற்கு, இலங்கையில் தற்போது தேவையான மருத்துவ மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் போதுமான அளவில் இல்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய அலுவலகத்துக்குப் பொறுப்பான உயர் அதிகாரியுடன் நான் முக்கிய சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளேன். இந்தச் சந்திப்பின் போது செம்மணி விவகாரம் குறித்தே பிரதானமாகப் பேசவுள்ளேன்.

சர்வதேசத் தரநிலைகளுக்கு ஏற்ப நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுயாதீனமான விசாரணையை உறுதிப்படுத்துவதற்காக, சர்வதேச நிபுணத்துவத்தையும் தொழில்நுட்ப உதவியையும் இலங்கை அரசு நாட வேண்டியதன் அவசியத்தை அவரிடம் எடுத்துக்கூறவுள்ளேன்.

செம்மணி மனிதப் புதைகுழி தளம் வரலாற்று ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தவோ, மரணம் நிகழ்ந்த சூழ்நிலைகளைக் கண்டறியவோ அதிகாரிகள் இதுவரை முறையான அக்கறை காட்டவில்லை. நீண்டகாலமாகத் தங்களின் உறவினர்களைத் தேடி, நீதிக்காகக் காத்துக்கொண்டிருக்கும் குடும்பங்களுக்குப் பதிலளிக்கத் தேவையான சர்வதேச ஒத்துழைப்பைப் பெறுவதற்கு, இலங்கை அதிகாரிகள் தயாராகவுள்ளனர் என்பதற்கான தெளிவான அறிகுறிகள் எதுவும் இதுவரை தென்படவில்லை என்பதையும் நோர்வே பிரதிநிதியிடம் சுட்டிக்காட்டுவேன்.

1998இல் செம்மணியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் இன்னமும் ஸ்கொட்லாந்து பல்கலைக்கழகத்தில் உள்ளன. இலங்கை அரசு நினைத்தால் நாளைய தினம்கூட அதிகாரபூர்வக் கடிதம் மூலம் மீண்டும் டி.என்.ஏ. பரிசோதனையை ஆரம்பிக்க முடியும். இந்த ஒட்டுமொத்தப் பரிசோதனைச் செயல்முறையையும் நோர்வே அரசு முன்னின்று பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் நான் வலுவாக முன்வைக்கவுள்ளேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.