செம்மணிப் புதைகுழியில் மேலும் 7 எலும்புக்கூடுகள்! – ஒரே நேர்கோட்டில் மூன்று எலும்புக்கூடுகள் அடையாளம் – அகழ்வாய்வில் தொடர்ந்து வெளிவரும் அதிர்ச்சி ஆதாரங்கள்.

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது, புதிதாக 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் மூன்று என்புத் தொகுதிகள் ஒரே நேர்க்கோட்டில் புதைக்கப்பட்டவாறு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட தடயவியல் அகழ்வாய்வுப் பணிகளின் 31ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று இடம்பெற்றன.

நேற்றைய தின அகழ்வாராய்ச்சியின் போது புதிதாக அடையாளம் காணப்பட்ட 7 மனித என்புத் தொகுதிகளும் முறைப்படி சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன. இதில் 3 மனித என்புத் தொகுதிகள் ஒரே நேரில் (ஒரே நேர்கோட்டில்) புதைக்கப்பட்டவாறு காணப்படுகின்றன.

அத்துடன், ஏற்கனவே அடையாளம் இடப்பட்டிருந்த என்புத் தொகுதிகளில் மேலும் 13 மனித என்புத் தொகுதிகள் நேற்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய இரண்டு பிரிவுகளிலிருந்தும், ஒட்டுமொத்தமாக இதுவரை 412 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் 390 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுப் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.