வெவ்வேறு நீர் நிலைகளில் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு!
கடுவலை மற்றும் வனாத்தவில்லு ஆகிய பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் இருந்து இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று நண்பகல் வேளையில் இவ்விரு சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், இது குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடுவலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவத்த பகுதியில் களனி கங்கையில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். முதற்கட்ட விசாரணைகளின் படி, உயிரிழந்த நபர் தித்தபத்தர பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, வனாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வில்லுவாவியில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதைப் பிரதேச மக்கள் கண்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சடலத்தை மீட்ட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த நபர் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறித்த விபரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இரண்டு மரணங்களும் தற்கொலையா, விபத்தா அல்லது ஏதேனும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவையா என்பது குறித்துக் கடுவலை மற்றும் வனாத்தவில்லு பொலிஸார் தனித்தனியாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
