புதிய வைரஸ் திரிபு காரணமாகவே டெங்குப் பரவல் அதிகரிப்பு! – பிரதமர் ஹரிணி தெரிவிப்பு.
இலங்கையில் அண்மைக்காலமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்திருப்பதற்கு, நாட்டில் புதிதாகப் பரவத் தொடங்கியுள்ள டெங்கு வைரஸ் திரிபு ஒன்றே முதன்மைக் காரணம் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
எனினும், அரசால் நாடு தழுவிய ரீதியில் டெங்கு ஒழிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுத் தீவிரப்படுத்தப்பட்டதன் விளைவாக, நோய்த்தொற்றின் தீவிரத்தன்மை தற்போது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
டெங்கு பரவலின் தற்போதைய கள நிலவரங்கள் குறித்து பிரதமர் நேற்றைய நிகழ்வொன்றின்போது மேலும் தெரிவித்ததாவது:-
“தற்போதைய தரவுகளின்படி, கொழும்பு மாவட்டத்தில் குறிப்பாக மஹரகம மற்றும் அதனை அண்மித்த சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே டெங்கு நோயாளர்களின் பரவல் மிக அதிகளவில் பதிவாகியுள்ளது. இதனால் இப்பகுதிகளில் விசேட மருத்துவ மற்றும் சுகாதாரக் குழுவினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் தங்களின் வீடுகளைச் சுத்தமாக வைத்திருந்த போதிலும், டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு வீடுகளை விடவும், பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலைகள், அரச மற்றும் தனியார் அலுவலக வளாகங்கள், பொது இடங்கள், நீண்டகாலமாகக் கைவிடப்பட்ட வெற்றுக்காணிகள் மற்றும் நகர்ப்புற கட்டுமானத் தளங்களே முக்கிய இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, இவ்விடங்களின் உரிமையாளர்களும் அதிகாரிகளும் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.” – என்றார்.
இதேவேளை, பிரதமரின் அறிவுறுத்தலுக்கு இணங்க நாட்டின் பல பகுதிகளில் முப்படைகளின் பங்களிப்புடன் டெங்கு ஒழிப்பு விசேட சோதனைகளும் துப்புரவு நடவடிக்கைகளும் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விசேட சோதனைகளின் போது, பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய சில அரச அலுவலக வளாகங்களுக்குள்ளேயே டெங்கு நுளம்புகள் பெருகும் அதீத அபாயகரமான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவுத் தகவல்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளன.
இத்தகைய நிறுவனங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவும், எச்சரிக்கை விடுக்கவும் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
