என் பக்கமிருந்த தவறை ஒப்புக்கொள்கிறேன்! நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்கின்றேன்!! – பிணையில் வந்த ‘மிஸ்டர் கொத்து’ உரிமையாளர் தெரிவிப்பு.

எ’மிஸ்டர் கொத்து’ நிறுவனத்தின் உரிமையாளரான விராஜ் விக்கிரமநாயக்க, மகரகம பொலிஸாரால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என அவரது தரப்பு சட்டத்தரணி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனத்தில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்த ஊழியர் ஒருவர், நிறுவனத்தின் உரிமையாளர் தன்னைத் தாக்கினார் என்று அளித்த புகாரின் அடிப்படையிலேயே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகரகம பொலிஸார் விடுத்த அறிவித்தலுக்கு இணங்க, விராஜ் விக்கிரமநாயக்க பொலிஸில் நேரில் முன்னிலையானமையைத் தொடர்ந்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவருக்கு எதிராக தண்டனைச் சட்டக் கோவையின் 314 (சாதாரண காயம் விளைவித்தல்) மற்றும் 486 (குற்றவியல் அச்சுறுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுகள் பிணையில் செல்லக்கூடியவை என்பதால், நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விவரங்களை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபரை 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணைகளின் போது, இரு தரப்பினருக்கும் இடையிலான இணக்கப்பாட்டுக்காக இந்த விவகாரம் மத்தியஸ்த சபைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது என்றும் சந்தேகநபர் தரப்பு சட்டத்தரணி விவரித்தார்.

நீதிமன்றத்தில் இருந்து பிணையில் வெளிவந்த பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த ‘மிஸ்டர் கொத்து’ நிறுவன உரிமையாளர் விராஜ் விக்கிரமநாயக்க தெரிவிக்கையில்,

“செய்ய வேண்டிய கடமையைச் செய்யப் போய் அங்கே ஒரு தவறு நடந்துவிட்டது. ஒட்டுமொத்த இலங்கைக்கே அதுவொரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிட்டது. அது குறித்து நான் உண்மையிலேயே நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன். எனது ஊழியருக்கு என்னால் ஏற்பட்ட விடயம் குறித்து எனக்கு வருத்தம் உள்ளது.

இது வேறு யாரோ திட்டமிட்டு நடத்திய சதி அல்ல, உண்மையில் எனது பக்கமிருந்த தவறினாலேயே இது நடந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கின்றேன். எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகளைத் திருத்திக்கொண்டு, புதியதொரு பயணத்தைத் தொடங்க எதிர்பார்த்துள்ளேன். இனிவரும் காலத்தில் புதியதொரு பாணியில் ‘புதிய கொத்து’ ஒன்றுடன் மீண்டும் வருவேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.