அரசியல் களத்தில் அடுத்த அதிரடி: பொள்ளாச்சியில் ‘வீ த லீடர்ஸ்’ முதல் மாநாடு – அண்ணாமலை அறிவிப்பு!

’வீ த லீடர்ஸ்’ (இது நம்ம இயக்கம்) அமைப்பின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் நடைபெறவுள்ளதாக அந்த அமைப்பின் நிறுவனர் கே. அண்ணாமலை அறிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, ஜூன் 5 ஆம் தேதி அக்கட்சியிலிருந்து விலகி ’வீ த லீடர்ஸ்’ என்ற அரசியல் அமைப்பை தொடங்கினார்.

முதலில் அமைப்பாக தொடங்கி, விரைவில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படும் என்றும், வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.

மேலும், இந்த இயக்கத்தில் சேருவதற்கான பிரத்யேக தளத்தையும் அவர் அறிமுகம் செய்தார். முதல் 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்தனர். தற்போது வரை 18.82 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

ஜூலை மாதம் முதல் ’வீ த லீடர்ஸ்’ அமைப்பின் பயிற்சிகள், செயல்பாடுகள் தொடங்கும் என்று அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், முதல் மாநாட்டை அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அண்ணாமலை, வருகின்ற ஜூலை 12 ஆம் தேதி வீ த லீடர்ஸ் அமைப்பின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாட்டை அமைப்பின் நிர்வாகிகள் மிக பிரம்மாண்டமாக செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.