உதயநிதியையும் சந்தித்த பேரவை!

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைத் தமிழ்த் தேசியப் பேரவையினர் இன்று காலை 10 மணியளவில் அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை கங்கரநேசன், சென்னை தமிழர் கட்சியின் தலைவர் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ், சிரேஷ்ட சட்டத்தரணிகளான சுபாஸ், நடராஜா காண்டீபன் மற்றும் கொள்கைப் பிரிவுச் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது, நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யுடன் நடைபெற்ற சந்திப்பில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்து மீண்டும் விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக, கடந்த 2025 டிசம்பர் 18 அன்று அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பாக 2026 பிப்ரவரி 11 அன்று அவர் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதம் இங்கு நினைவூட்டப்பட்டது.

அந்தக் கடிதத்தில் உள்ள நிலைப்பாடுகளைத் தொடர்ந்து உறுதியுடன் வலியுறுத்துவதுடன், இலங்கையில் ஒற்றையாட்சி அரசியல் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்தச் சந்திப்பில் கோரப்பட்டது. இதற்காக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து, இந்திய மத்திய அரசுக்குத் தேவையான அரசியல் அழுத்தங்களை வழங்க வேண்டும் எனவும் ஈழத் தலைவர்களால் வலியுறுத்தப்பட்டது.

ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு நிலையான தீர்வாக, தமிழர்களின் தேசம் மற்றும் தனித்துவமான மக்கள் என்ற அங்கீகாரத்தின் அடிப்படையில், சுயநிர்ணய உரிமையுடன் கூடிய கூட்டாட்சிக் கட்டமைப்பிலான (சமஷ்டி) அரசியல் தீர்வை ஏற்படுத்த இந்தியா உறுதியான முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன், தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை குறித்து சர்வதேச, சுயாதீன மற்றும் நம்பகமான விசாரணையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் ஈழத் தமிழ் மீனவர்களுக்கு இடையே எல்லைத் தாண்டிய மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக நீண்டகாலமாக நிலவி வரும் முரண்பாடுகளுக்கு ஆக்கபூர்வமான முறையில் உடனடியாக நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சந்திப்பின் போது, இரு தரப்பு மீனவப் பிரதிநிதிகளையும் நேரடியாகச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு நிலையான தீர்வை உருவாக்குவதாக அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்த விடயமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்ந்து வரும் ஈழத் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் மனிதாபிமானத் தேவைகளுக்கும் ஏற்ப, அவர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வு குறித்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு பிரதிநிதித்துவக் குழுவை அமைத்து, அதன் ஊடாக அனைத்துக் கட்சி மாநாடொன்றை நடத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுக்குமாறும், ஈழத் தமிழர் உரிமைப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என்றும் இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியப் பேரவையினரால் வலியுறுத்தப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.