‘எல் நினோ’, லா நினா’ காலநிலை எச்சரிக்கை: இலங்கையைப் பாதுகாப்பது தொடர்பில் நிபுணர்களுடன் சஜித் அவசர ஆலோசனை.

உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் ‘எல் நினோ’ மற்றும் ‘லா நினா’ காலநிலை நிலைமைகளால் இலங்கைக்கு ஏற்படும் மோசமான தாக்கங்களைக் குறைத்துக் கொள்வது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சர்வதேச மற்றும் உள்நாட்டு நிபுணர்களுடன் அவசர கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார்.

இந்த விசேட கலந்துரையாடல் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மெட்ரோபொலிட்டன் விரிவுரையாளர் ஸ்ரீநாத் பெர்னாண்டோ, சுற்றாடல் நிபுணர் கலாநிதி ஸ்பென்சர் வித்தாரண, ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதம பொருளாதார அதிகாரி ஹசிதா விக்கிரமசிங்க மற்றும் உலக வங்கியின் சிரேஷ்ட சுற்றாடல் நிபுணர் நதீர ராஜபக்‌ஷ ஆகியோர் கலந்துகொண்டு தமது ஆலோசனைகளை வழங்கினர்.

அங்கு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் உரையாற்றுகையில்,

“எல் நினோ மற்றும் லா நினா நிலைமைகளால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து நிபுணர்கள் சமர்ப்பிக்கும் முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை, காலநிலை மாற்றம் பற்றிய நாடாளுமன்ற ஒன்றியம் மற்றும் நாடாளுமன்றத்தின் அவசர கவனத்துக்குக் கொண்டு சென்று, நாட்டின் தேசிய கொள்கை நிகழ்ச்சி நிரலில் உள்வாங்க நடவடிக்கை எடுப்பேன். நான் இந்த நாடாளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவராகச் செயற்படுவதால், நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இந்த விவகாரத்தில் பொறுப்புணர்வுடனும் ஆக்கப்பூர்வமாகவும் தலையிடத் தயாராகவுள்ளோம்.

பசிபிக் பெருங்கடலின் நீரின் வெப்பநிலை மற்றும் வளிமண்டல அழுத்த மாறுபாடுகள் காரணமாகவே ‘தெற்கு சுழற்சி’ என அழைக்கப்படும் இந்தக் காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. எல் நினோவின் போது கடல் நீர் வழமைக்கு மாறாக அசாதாரணமாக வெப்பமடைகின்றது. ‘லா நினா’வின் போது அது வழமையை விட குளிர்ச்சியடைகிறது. இந்த உலகளாவிய வானிலை மாற்றங்களால் வறட்சி, கடுமையான வெள்ளம், வெப்ப அலைகள், நீர் பற்றாக்குறை மற்றும் உணவு உற்பத்தி வீழ்ச்சி போன்ற பாரிய நெருக்கடிகள் இலங்கையிலும் ஏற்படக்கூடும்.

கடந்த 1982, 1997-1998 மற்றும் 2015-2016 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட ‘எல் நினோ’ நிலைமைகள் காரணமாக சர்வதேச ரீதியாகப் பாரதூரமான காலநிலை நெருக்கடிகள் உருவானதை நாம் மறந்துவிடக் கூடாது. இம்முறை உலக அளவில் ‘சுப்பர் எல் நினோ’ நிலைமை ஏற்படுவது குறித்து சர்வதேச வானிலை ஆய்வாளர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர். அவ்வாறு நிகழ்ந்தால், நடப்பு 2026 அல்லது வரவிருக்கும் 2027 ஆம் ஆண்டுகளில் உலகளாவிய வெப்பநிலை மட்டம் ஆபத்தான குறிப்பிட்ட எல்லையைத் தாண்டக்கூடும் எனப் பல கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த மோசமான வானிலை உலக மக்களின் கலோரி தேவையில் சுமார் 60 வீதத்தைப் பெற்றுத் தரும் அரிசி, கோதுமை, சோளம் மற்றும் சோயா போன்ற முக்கிய பயிர்களின் உற்பத்தியைக் கடுமையாகப் பாதிக்கும். இதன் மூலம் உலக அளவில் மட்டுமன்றி, உள்நாட்டிலும் உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்து பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகின்றது.

இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் இத்தகைய காலநிலை நெருக்கடிகளை எதிர்கொள்ளும் போது உட்கட்டமைப்பு, நிதி மற்றும் தொழில்நுட்ப ரீதியாகப் பல சவால்களை எதிர்கொள்கின்றன. இதற்காக நாம் இப்போதிருந்தே போதிய தயார் நிலையையும், காலநிலை நெகிழ்ச்சித் திறனையும் அதிகரித்துக்கொள்வது மிக அத்தியாவசியமானதாகும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.