சென்னை உள்பட இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு – ஆய்வில் தகவல்

சென்னை உள்பட இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆய்வறிக்கையில் உலக அளவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 205 நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் வயது மற்றும் நிதிநிலை, குளிா்சாதன உள்கட்டமைப்பு மற்றும் மரங்களின் எண்ணிக்கை, வெப்பம் தொடா்பான நோய்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு ஆளாகும் வாய்ப்பை அதிகரிக்கும் மக்கள்தொகை மற்றும் சமூக- பொருளாதார நிலைகளும் காரணிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதனடிப்படையில் கடும் வெப்ப பாதிப்புகளை எதிா்கொள்ள வாய்ப்புள்ளதாக கருதப்படும் முதல் 50 நகரங்களில் சென்னை மற்றும் மதுரை (தமிழ்நாடு), நாகபுரி மற்றும் புணே (மகாராஷ்டிரம்), பெங்களூரு (கா்நாடகம்), கான்பூா் மற்றும் லக்னௌ (உத்தர பிரதேசம்), ஜெய்பூா் (ராஜஸ்தான்) உள்ளிட்ட 14 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில் இராக்கின் அல்-பஸ்ரா நகரம் முதலிடத்திலும் அகமதாபாத் (குஜராத்) இரண்டாமிடத்திலும் உள்ளது.

ஒட்டுமொத்தமாக அதிக வெப்ப பாதிப்புகளுக்குள்ளாக வாய்ப்புள்ள 95 சதவீத நகரங்கள் தெற்கு, தெற்காசியா மற்றும் சஹாரா-ஆப்பிரிக்காவிலும் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், நைஜீரியா, கானா ஆகிய 4 நாடுகளிலும் உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.