நீதி அமைச்சரை நீக்கிவிட்டு விசாரணையை நடத்துங்கள்! – நளின் பண்டார எம்.பி. இடித்துரைப்பு.

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரத்தில் அரசு மிகவும் பொறுப்பற்ற முறையில் செயற்படுகின்றது என்று குற்றம் சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவைப் பதவியிலிருந்து நீக்காமல் இந்தச் சம்பவம் குறித்து ஒருபோதும் நியாயமான விசாரணையை முன்னெடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து வெளியிட்ட நளின் பண்டார எம்.பி.,

“நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக நாம் தீவிர அவதானம் செலுத்தியுள்ளோம். பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட நீதி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கவுள்ளோம். எதிர்க்கட்சியில் இருந்தபோது விமர்சனங்களை முன்வைத்தவர்கள், இன்று ஆட்சிக்கு வந்து அதே பொறுப்பற்ற தன்மையைக் கடைப்பிடிக்கின்றனர்.” – என்று குறிப்பிட்டார்.

சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்குப் பதிலாக, வரலாற்றுச் சிறப்புமிக்க போகம்பறை சிறைச்சாலை வளாகத்தை மீண்டும் சிறைச்சாலையாக மாற்றுவதற்கு அரசு எடுத்து வரும் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு அவர் தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

“போகம்பறை சிறைச்சாலை வளாகத்தை முதலீட்டுச் சபையின் கீழ் கொண்டு வந்து, சுற்றுலா மற்றும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாற்றியமைத்தோம். ஆனால், தற்போதைய அரசு மீண்டும் அதனைச் சிறைச்சாலையாக மாற்றுகின்றது. ஒரு நாட்டின் கொள்கை என்பது சிறைச்சாலையைக் குறைப்பதாகவே இருக்க வேண்டும். சிறைச்சாலைகள் தேவையென்றால் வேறு பொருத்தமான இடங்களைக் கண்டறியலாம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இவ்வாறு பயன்படுத்துவது தவறு.” – என்றார்.

தகுதியான அரச அதிகாரிகளை முறையற்ற விதத்தில் இடமாற்றம் செய்வது ஒட்டுமொத்த அரச பொறிமுறையையும் வீழ்ச்சியடையச் செய்கின்றது என்று சாடிய அவர், “சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை நீக்கியமை நியாயமற்றது. அவரை மீண்டும் பதவியில் அமர்த்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மஹர சிறைச்சாலைச் சம்பவத்தின் போது இருந்தவாறே, இப்போதும் ஜனாதிபதி தலையிட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும்.” – என்று அவர் வலியுறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.