தமிழ் பேசும் கட்சிகளின் சங்கம்: பின்னணியில் அநுர அரசு இல்லை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்.

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள புதிய சங்கமத்தின் பின்னணியில் அரசு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது, நேற்றுமுன்தினம் கொழும்பில் உருவாக்கப்பட்ட தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றியத்தின் பின்னணியில் அரசின் தலையீடு ஏதேனும் உள்ளதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“எதிரணிகளின் ஒன்றிணைவு குறித்து எதிர்க்கட்சித் தலைவரிடம்தான் நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும். ஆளுங்கட்சிக்குள் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் என்னிடம் கேளுங்கள். எதிரணிகளை ஒருங்கிணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டியது எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பாகும். நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சித் தரப்பில் எமக்கு 159 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலம் உள்ளது. அவர்களுடன் நாம் எமது பயணத்தை முன்னெடுத்து வருகின்றோம். எனவே, புதிய கூட்டணிகளை உருவாக்க வேண்டிய தேவைப்பாடு எமது அரசுக்குக் கிடையாது.” – என்றார்.

தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழிமுறைகளின் ஓர் அங்கமாக, பொதுக் கட்டமைப்பொன்றின் கீழ் இணைந்து செயற்படுவதற்கு ஆறு பிரதான தமிழ் பேசும் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே இவ்வாறு ஒன்றிணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.