கிளிநொச்சியில் இன்று அர்ச்சுனா அட்டகாசம்! – அதிகாரிகளின் புறக்கணிப்பால் பாதியிலேயே கலைந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

https://we.tl/t-KOGauf81v12jgnKF

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் செயற்பாடுகள் காரணமாகக் கடும் குழப்பங்களுக்கு மத்தியில் பாதியிலேயே முடிவுக்கு வந்தது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இன்று காலை 9 மணிக்குக் கூட்டம் ஆரம்பமானது. காலை 9:15 மணியளவில் கூட்டத்துக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, கூட்டத்தின் ஆரம்பம் முதலே அநாகரிகமாக நடந்துகொண்டார்.

கூட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முன்வைத்த கருத்துகளுக்கு அர்ச்சுனா தரக்குறைவான வார்த்தைகளைப் பிரயோகித்தார். இதனைக் கட்டுப்படுத்தத் தவறிய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரிடம் தமது எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டு, சிறிதரன் எம்.பி. கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து, திருவையாறு பகுதியில் அமைச்சர் லால் காந்தவின் தென்னை செய்கை விநியோகத் திட்டத்தில் மோசடி இடம்பெற்றுள்ளது என்று அர்ச்சுனா எம்.பி. குற்றஞ்சாட்டினார். எனினும், அந்தத் திட்டத்துக்கு இதுவரை நிதி விடுவிக்கப்படவில்லை என்றும், உர மானியம் வழங்கப்படவில்லை என்றும் கமநல சேவைத் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் தெளிவுபடுத்தினார்.

இதனை ஏற்க மறுத்த அர்ச்சுனா எம்.பி., கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரைத் தனிப்பட்ட ரீதியில் அச்சுறுத்தியதுடன், ஊழல்வாதி என்றும் விமர்சித்தார். இதற்குப் பதிலளித்த மாவட்ட அரச அதிபர், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல், ஆதாரம் இருப்பின் அதனை முன்வைக்குமாறு சவால் விடுத்தார்.

இந்தக் கருத்து மோதலைத் தொடர்ந்து, அர்ச்சுனா எம்.பியின் ஒழுங்கீனமான மற்றும் தரக்குறைவான நடத்தையைக் கண்டித்து, கூட்டத்தில் கலந்துகொண்ட நான்கு பிரதேச செயலாளர்களும், ஏனைய திணைக்கள அதிகாரிகளும், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.

அதிகாரிகள் வெளியேறிய பின்னரும், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சருடன் அர்ச்சுனா எம்.பி. தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் மோதலுக்கும் தயாரானர். முரண்பாடு முற்றிய நிலையில், அமைச்சரின் உத்தியோகத்தர்கள் அவரைத் தடுக்க முயன்றனர். இறுதியாக, பொலிஸார் தலையிட்டு அர்ச்சுனா எம்.பியை அங்கிருந்து அழைத்துச் சென்றதையடுத்து, முற்பகல் 11 மணியளவில் கூட்டம் குழப்பங்களுக்கு மத்தியில் முடிவுக்கு வந்தது.

Leave A Reply

Your email address will not be published.