தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டதா அரசு? – முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கடும் சாடல்.

தேசிய மக்கள் சக்தி அரசு, தான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய முக்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் மறந்துவிட்டுச் செயற்படுகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“எதிர்க்கட்சியாக இருந்தபோது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், ஜனநாயகத்தை வலுப்படுத்துதல் மற்றும் புதிய அரசமைப்பை உருவாக்குதல் ஆகியவையே தேசிய மக்கள் சக்தியின் பிரதான நிலைப்பாடுகளாக இருந்தன. இது குறித்துப் பல்வேறு கருத்துகளைத் தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் அந்தக் கட்சியினர் முன்வைத்து வந்தனர்.

இருப்பினும், இன்று ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் அல்லது புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்து அரசு எவ்விதக் கருத்துகளையும் முன்வைப்பதில்லை. இது தொடர்பான கலந்துரையாடல்களும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

அன்று நடைமுறையிலிருந்த அரசமைப்பைக் கடுமையாக விமர்சித்த தேசிய மக்கள் சக்தியினர், இன்று அதே அரசமைப்பையே பின்பற்றி ஆட்சி நடத்தி வருகின்றனர். அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான அரசமைப்பு மறுசீரமைப்பை முற்றிலும் கைவிட்டுள்ளதுடன், அதன் செயற்பாடுகளில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.