நாட்டில் டெங்கு பாதிப்பு தீவிரம்! 24 மணித்தியாலத்தில் மூவர் பலி!! – 53 ஆக உயர்ந்த உயிரிழப்புகள்.

இலங்கையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் டெங்குத் தொற்று காரணமாக மூவர் உயிரிழந்துள்ளனர் என்றும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்மூலம், இந்த ஆண்டில் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவினால் இறுதியாக வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டில் இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 478 ஆக உயர்ந்துள்ளது.

டெங்குப் பரவலின் தீவிரத்தை உணர்த்தும் வகையில், இம்மாதத்தின் முதல் 17 நாள்களில் மட்டும் நாடு முழுவதும் 19 ஆயிரத்து 100 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

நாட்டிலேயே அதிகப்படியான டெங்கு பாதிப்புகள் மேல் மாகாணத்திலேயே பதிவாகி வருகின்றன. மாகாண ரீதியான தரவுகளின்படி, கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 15 ஆயிரத்து 596 டெங்கு நோயாளர்கள் பதிவாகி, முதலிடத்தில் உள்ளது.

டெங்குப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், நுளம்புகள் பெருகுவதைத் தடுப்பதற்கும் பொதுமக்களின் பங்களிப்பு மிக அவசியமானது என்று சுட்டிக்காட்டியுள்ள சுகாதார அதிகாரிகள், தத்தமது சூழலைச் சுத்தமாக வைத்திருக்குமாறும், நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை உடனடியாக அழிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மக்கள் இது குறித்து மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்படுமாறு சுகாதாரத் துறையினர் தொடர்ந்தும் அறிவுறுத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.