நீதி அமைச்சருக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்க்கட்சிகளின் முழு ஆதரவு கிடைக்கும்! – ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கை

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களும் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நீதி அமைச்சர் தனக்குரிய பொறுப்புகளைத் தட்டிக்கழித்துள்ளார். நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு குறித்த தனது கடமையை நிறைவேற்ற அவர் தவறியுள்ளார். இதன் காரணமாகவே நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பிக்கத் தீர்மானித்தோம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இந்தப் பிரேரணையில் கையெழுத்திட்டனர். நீதி அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகளை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதால், இந்தப் பிரேரணையைச் சபாநாயகர் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.