மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்: கர்நாடக கிராமத்தில் தொடரும் வினோத வழிபாடு!

இந்தியாவின் கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியைத் தொடர்ந்து, நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற வேண்டுதலுடன் கிராம மக்கள் பாரம்பரிய நம்பிக்கையின்படி வினோத வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யாததால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக குடிநீர் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளதுடன், விவசாய நடவடிக்கைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குடிநீரைப் பெறுவதற்காக பெண்கள் தினமும் பல கிலோமீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் மட்டுமன்றி கால்நடைகளும் நீர்த் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கிராமத்தில் மழை பெய்து வறட்சி நீங்க வேண்டும் என்ற நோக்கில் அப்பகுதி பெண்கள் பாரம்பரிய நம்பிக்கையொன்றை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு வழிபாட்டை நடத்தியுள்ளனர்.

இதன்போது இரண்டு தவளைகளைப் பிடித்து அவற்றுக்கு மாலை அணிவித்து, மேளதாளங்களுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

தொடர்ந்து, மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனைகளும் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பில் அப்பகுதி பெண்கள் தெரிவிக்கையில், வறட்சி காலங்களில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பது தமது முன்னோர்களிடம் இருந்து வந்த நம்பிக்கை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது நீர்த் தட்டுப்பாட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவும் இந்த வழிபாடு நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.