வத்தளை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய இலங்கையர்கள் இருவர் தமிழகத்தில் கைது?
கொழும்பு – வத்தளைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இலங்கையர்கள் இருவர், தமிழகம் – இராமேஸ்வரத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த மேற்படி இருவரும், இன்று அதிகாலை கடல் வழியாகப் படகு மூலம் இந்தியாவுக்குள் நுழைந்தபோது தமிழகப் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

தமிழகத்தின் இராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் தரையிறங்கி அங்கிருந்து தப்பியோட முயன்றபோதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை ஏற்றிச் சென்ற படகு அங்கிருந்து தப்பியோடியுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட இருவரிடமும் தமிழகப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்த விசாரணைகளின் போதே, இவர்கள் வத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் நேரடித் தொடர்பு கொண்டு இலங்கையிலிருந்து தப்பிச் சென்றவர்கள் என்ற திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது என்று தமிழகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் இராமநாதபுரத்தில் வைத்து ‘மரையின்’ மற்றும் ‘க்யூ’ பிரிவு பொலிஸார் இணைந்து தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எவ்வாறாயினும், இந்தச் செய்தி இதுவரை உத்தியோகபூர்வமாக முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
