ஓய்வூதிய வயதை மேலும் 5 ஆண்டுகள் அதிகரிக்க வேண்டும் – சரத் பொன்சேகா வலியுறுத்து.

ஓய்வூதிய வயதை மேலும் ஐந்து ஆண்டுகள் முன்னோக்கி நகர்த்துவதன் மூலம் மக்களின் மன அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்று முன்னாள் அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பிரதம நீதியரசரைத் தொடர்ந்து பதவியில் வைத்திருக்க வேண்டும் என்றும், சட்டத்தரணிகளின் சேவைக் காலத்தை நீடிக்க வேண்டும் என்றும் சிலர் கூறும் கருத்துக்களுக்கு நான் முழுமையாக உடன்படுகின்றேன்.

நாட்டின் சாதாரண இராணுவ வீரர்கள் 20 ஆண்டுகள் சேவைக் காலத்துக்குப் பின்னர் (சுமார் 45 வயதில்) ஓய்வுபெற வேண்டியுள்ளது. அந்த வயதில்தான் அவர்களின் பிள்ளைகள் சாதாரண தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருப்பதுடன், புதிதாக வேறு ஒரு வேலையைப் பெற்றுக்கொள்வதும் அவர்களுக்குக் கடினமாகவுள்ளது. அதேபோல, இராணுவ அதிகாரிகள் 50 அல்லது 55 வயதிலும், அரச ஊழியர்கள் 60 வயதில் ஓய்வுபெறும்போதும் அவர்களின் பிள்ளைகள் பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்துகொண்டே இருக்கின்றனர்.

உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளைப் போல் ஓய்வூதிய வயதை மேலும் ஐந்து ஆண்டுகள் முன்னோக்கி நகர்த்தினால், மக்களின் மன அழுத்தம் குறையும். மனிதர்களால் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்ற முடியும். அமெரிக்கா போன்ற நாடுகளில் 70 வயது வரை கூட இராணுவத் தளபதிகளாகப் பணியாற்றுகின்றனர். சில நாடுகளில் நீதிபதிகள் 70 வயதிலேயே ஓய்வூதியம் பெறுகின்றனர். அப்படியிருக்கையில் நமது நாட்டு மக்களுக்கு மட்டும் ஏன் இதில் தயக்கம் உள்ளது?

நான் இராணுவப் பணியிலிருந்து விலகி 20 ஆண்டுகள் ஆனாலும், எனது மூளை மற்றும் உடல் உறுப்புகள் இன்னமும் மிகச் சிறப்பாகச் செயற்படுகின்றன. இப்போது மீண்டும் இராணுவப் பொறுப்பை வழங்கினாலும் அதைத் திறம்பட வழிநடத்த முடியும். இருப்பினும், நான் அதனை மீண்டும் பெறப்போவதில்லை. பழைய கலாசாரத்தில் சுகபோகமாக வாழ்ந்தவர்களே இவ்வாறான சரியான திட்டங்களை விரும்புவதில்லை.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.