மூதூர் படுகொலைக்கு 20 ஆண்டுகள் கடந்தும் நீதி வழங்கப்படவில்லை – மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் அதிருப்தி.

சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட மூதூர் படுகொலை இடம்பெற்று 20 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் இன்னமும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

அத்தோடு, மூதூர் படுகொலை உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரிப்பதற்காக ஒரு சுயாதீன சட்டவாதியை நியமிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளித்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கைப் பிரிவு இயக்குநர் ஜேம்ஸ் ரோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“போரின் தீவிரத்துக்கு உள்ளாகியிருந்த திருகோணமலைக்கு அருகில் அமைந்துள்ள மூதூர் நகரில், 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4ஆம் திகதி பாரிஸ் நகரைத் தளமாகக் கொண்டு இயங்கிய ‘அக்ஷன் எகெய்ன்ஸ்ட் ஹங்கர்’ அமைப்பைச் சேர்ந்த 17 இலங்கைத் தன்னார்வ உதவிப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அலுவலக வளாகத்துக்குள் 15 பணியாளர்களின் உடல்கள் தலையிலும் கழுத்திலும் மிக அருகில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட காயங்களுடன் கண்டறியப்பட்டன. தப்பிச் செல்ல முயன்ற மேலும் இருவரின் உடல்கள் அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திலிருந்து மீட்கப்பட்டன.

இது தொடர்பாக அடுத்தடுத்து ஆட்சிப்பீடமேறிய அரசுகள் விசாரணைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்த போதிலும், தன்முனைப்புடன் செயற்படாத முக்கிய 12 மனித உரிமை வழக்குகளில் இதுவும் ஒன்றாகும். கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரும், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளும் பல்லாண்டுகளாக நீதிக்காகக் காத்திருக்கின்றனர்.

யுத்த கால வன்முறைகள் மற்றும் அதன் பின்னரான மீறல்களால் பாதிக்கப்பட்ட சகலருக்குமான நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு சர்வதேச நாடுகள் இலங்கை மீது தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.