“வினாத்தாள் கசிவு மாஃபியாக்கள் நிச்சயமாகத் தப்ப முடியாது” – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

புதுடெல்லி: வினாத்தாள் கசிவு மாஃபியாக்கள் நிச்சயமாகத் தப்ப முடியாது. அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.

நாட்டின் தேர்வு முறையில் முக்கியச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும், வினாத்தாள்களை கசிய விடுபவர்களுக்கும் எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கும் வழிவகுக்கும் வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் அண்மையில் நிறைவேறியது.

இந்த மசோதா நிறைவேறியதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: “கடந்த பல தசாப்தங்களாக மத்திய மற்றும் மாநில அரசுகள் வினாத்தாள் கசிவு என்ற மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு வந்தன. இதனால் கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டது. இந்தச் சூழலை மாற்றவே நமது அரசு தேர்வு முறையில் அதிவேக நடவடிக்கைகள், தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் மாநிலங்களின் ஆலோசனைகளை உள்ளடக்கிய தொடர் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.

மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் வினாத்தாள் கசிவு மாஃபியாக்கள் நிச்சயமாகத் தப்ப முடியாது. அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாட்டின் கல்வி அமைப்பில் மத்திய மற்றும் மாநில அளவிலான இத்தகைய சீர்திருத்தங்கள் மிகவும் அவசியமானவை” என்று அந்த வீடியோவில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய சட்டத்தின் மூலம், வினாத்தாள் கசிவில் ஈடுபடும் நபர்களுக்குக் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், அமைப்பாகச் செயல்படும் கும்பல்களுக்கு ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும். இதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு 2 மாதங்களுக்குள் விசாரணை நிறைவு செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.