உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: ஹேமசிறி, பூஜிதவுக்கு மரண தண்டனை தீர்ப்பு – கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி.
இலங்கையின் வரலாற்றில் மிகவும் சோகமான சம்பவமான உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தின் ஆயம் தீர்ப்பளித்துள்ளது.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கைகள் கிடைத்திருந்தும், அதனைத் தடுத்து நிறுத்தத் தவறியமை மற்றும் அதன் மூலமான குற்றவியல் அலட்சியம், கடமைத் தவறியமை மற்றும் படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் வழக்குத் தொடரப்பட்டது.
கடந்த 2022ஆம் ஆண்டில், மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் பிரதிவாதிகள் இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்துத் தீர்ப்பளித்திருந்தது.
மேல் நீதிமன்றத்தின் அந்த உத்தரவை எதிர்த்துச் சட்டமா அதிபர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டின் அடிப்படையில், விடுவிப்பு பிழையானது எனத் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் விசாரணையைத் தொடருமாறு உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க நடைபெற்ற மீள் விசாரணைகளின் முடிவில், பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய, திலக்கரத்ன பண்டார ஆகிய மூவரடங்கிய கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட ஆயம் பெரும்பான்மைத் தீர்ப்பின் மூலம் பிரதிவாதிகள் இருவருக்கும் மரண தண்டனை வழங்கி நேற்று தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகளில் விராஜ் வீரசூரிய மாத்திரம் அரசு வழக்கைத் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கவில்லை எனக் கூறி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பை, மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் தலைவர் நீதிபதி பிரியந்த லியனகே அறிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் பல இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.
மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் ஆகியவற்றை இலக்கு வைத்து இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.
எட்டு தற்கொலை குண்டுதாரிகளால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் 268 பேர் பலியானதுடன், 586 பேர் காயமடைந்தனர்.
பலியானவர்களில் 40 வெளிநாட்டவர்களும், 45 சிறார்களும் அடங்குகின்றனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையிலேயே அந்தக் காலப் பகுதியில் பாதுகாப்புச் செயலாளர் பதவியில் இருந்த ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்த பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்து வந்த 30 ஆண்டு கால யுத்தம் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர், நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலாக 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கருதப்படுகின்றது.
