உத்தரக்கண்டில் கனமழை: சமோலியில் பெய்லி பாலம் அடித்துச் செல்லப்பட்டு பெரும் பரபரப்பு
உத்தரக்கண்டின், சமோலி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பெய்லி பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரக்கண்டில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகின்றது. சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோதிர்மத்-மலாரி வாகனப் பாதையில், தமாக் நாலா பகுதியில் திடீர் நீர்வரத்து அதிகரிப்பு ஏற்பட்டது. இதனால், அங்கிருந்த பெய்லி பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இச்சம்பவம் குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, பாலம் அடித்துச் செல்லப்பட்ட பகுதிக்கு என்டிஆர்எஃப் மற்றும் எஸ்டிஆர்எஃப் குழுக்கள் விரைந்தனர். தற்போது அக்குழுக்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
முதல்வர் அலுவலகத்தின் தகவலின்படி,
கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் தமாக் நாலா பகுதியில் கட்டப்பட்டிருந்த பெய்லி பாலம் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டது.
நீர்வரத்து அதிகரிப்பால், எல்லைச் சாலைகள் அமைப்பின் (பிஆர்ஓ) ஓட்டுநர் பங்கஜ் குமார் தனது வாகனத்துடன் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அவரைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோதிர்மத்-மலாரி சாலையில் வாகனப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து விலகி இருக்குமாறும், நிலைமை சீரடையும் வரை அப்பாதையில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
ஆற்றுப் படுகையின் கீழ்மட்டப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஆபத்தான இடங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் முதல்வர் தாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தேவைப்படும் இடங்களில் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும், ஆறுகள், ஓடைகள் மற்றும் திடீர் நீர்வரத்து அபாயம் உள்ள பகுதிகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும் அவர் நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டார்.
சேதமடைந்த பாலத்தால் ஏற்படும் பாதிப்பு, அருகிலுள்ள கிராமங்களுக்கு ரேஷன் பொருள்கள், உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்கள் விநியோகிக்கப்படுவதில் இடையூறு ஏற்படுத்தாதவாறு பார்த்துக்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். தேவைப்பட்டால், மாற்றுப் பாதைகள் மூலம் அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மை மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளர் வினோத் குமார் சுமன் கூறுகையில்,
மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம் சமோலி மற்றும் உத்தரகண்ட் முழுவதும் உள்ள ஆபத்து வாய்ப்புள்ள பகுதிகளைத் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார். மாவட்ட நிர்வாகங்கள், சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒருங்கிணைத்து வருவதாகவும், தேவைக்கேற்ப மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதையும், திடீர் நீர்வரத்துக்கான வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டு, தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்றங்கரையோரப் பகுதிகளில் சிறப்புக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் தெரிவித்தார்.
உள்ளூர் சூழலைக் கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
