யாழில் 400 பேருக்குக் கண் பாதிப்பு: ஆபத்தான மின்குமிழ்களை வைத்திருந்த நபர் மறியலில்!

யாழ். பண்டத்தரிப்பு – பிரான்பற்று ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த திருவிழாவின்போது பயன்படுத்தப்பட்ட அதிதீவிர ஒளி மின்குமிழ்களால் 400 இற்கும் மேற்பட்ட பக்தர்களின் கண்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக மின்குமிழ்களைத் தம்வசம் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவின்போது, பொதுமக்களுக்குப் பாதகமான முறையில் அதிக ஒளியை வெளியிடக்கூடிய மின்குமிழ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் திருவிழாவிக்கு வருகை தந்திருந்த 400 இற்கும் மேற்பட்டோரின் கண்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த இளவாலைப் பொலிஸார், தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர். விசாரணைகளின் அடிப்படையில், அதிக ஒளியை ஏற்படுத்திய மின்குமிழ்களை விற்பனைக்காகவோ அல்லது பயன்பாட்டுக்காகவோ தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பலத்த பாதுகாபுக்கு மத்தியில் நேற்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிவான், சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

பொதுமக்களின் சுகாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் இவ்வாறான முறையற்ற ஒளிப் பயன்பாடுகள் குறித்துப் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.