தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 9,000 கன அடி நீர்: காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!

தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு 9,000 கன அடி வீதம் நீர் திறக்க ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. 9,000 கன அடி நீர் திறக்க ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த நிலையில் டெல்லியில் நாளை மேலாண்மை ஆணையம் நாளை கூடுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தமிழ்நாட்டிற்கு காவிரியில் உரிய தண்ணீர் திறந்து விடப்படாததால் தமிழ்நாட்டில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தவிடக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் சேத் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜரானார். அவர், “அண்மையில் கூடிய காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, தமிழ்நாட்டிற்கு ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு, விநாடிக்கு 12,000 கனஅடி நீர் வீதம் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை ஆணையமும் அந்த உத்தரவை உறுதிப்படுத்தியது. ஆனால், துரதிருஷ்டவசமாக, தமிழ்நாட்டுக்கு உரிய நீர் கிடைக்கவில்லை” என்று வாதிட்டார்.மேலும், தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடகாவுக்கு உத்தரவிடவில்லை என்றும் அவர் வாதிட்டார்.

அப்போது, “காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம், ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில், கர்நாடகா உரிய நீரை திறக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு முறையிடலாம்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.கடந்த நீதிமன்ற விசாரணையின் போது, தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்பட்ட நீர் குறித்த விவரங்களை கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.அந்த அறிக்கையை சுட்டிக்காட்டி, காவிரி மேலாண்மை உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுள்ளதே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, “விகிதாச்சார அளவில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை கர்நாடகா திறந்து விடுவதில்லை” என்று தமிழ்நாடு அரசின் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தெரிவித்தார். மேலும், “கர்நாடகாவில் விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடுகிறார்கள். ஆனால், எங்களால் எங்கள் விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விட முடியவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.