மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்! – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தகவல்.
மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி சமீபத்தில் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. அக்கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
“மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்றக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டக் கட்டமைப்பு மற்றும் எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவடைந்தவுடன் நிச்சயமாக மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும்.” – என்றார்.
