சுரேஷ் சலேவுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை! – சரத் வீரசேகர குற்றச்சாட்டு.
முன்னாள் அரச புலனாய்வுத் தலைவர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் முற்றிலும் சட்டவிரோதமானவை என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றம் சாட்டினார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய 180 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் இம்மாதம் 28ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள நிலையில், அதனை மேலும் நீடிப்பது பொருத்தமற்றது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட 7 உள்நாட்டு ஆணைக்குழுக்களின் அறிக்கைகளிலோ அல்லது அடிப்படை உரிமை மனுக்களிலோ சுரேஷ் சலேவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
எஃப்.பி.ஐ (ய்யணூ) மற்றும் ஆஸ்திரேலிய பொலிஸ் உள்ளிட்ட சர்வதேச புலனாய்வு அமைப்புகளும் இது ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ தாக்குதல் என்றே முடிவு செய்துள்ளன.
‘சனல் 4’ ஊடகத்திற்கு எல்.ரி.ரி .ஈ. அமைப்பின் முன்னாள் உறுப்பினரான அஷாத் மௌலானா வழங்கிய பொய் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்கூற்று முற்றிலும் பொய்யானது என முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இமாம் ஆணைக்குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டின் பயங்கரவாத வலையமைப்பை அழிக்கப் பாடுபட்ட ஒரு படைவீரருக்கு இழைக்கப்படும் இந்த அநீதி எமக்குக் கவலையளிக்கின்றது.
தாக்குதல் நடந்த போது சுரேஷ் சலே அரச புலனாய்வுத் தலைவராக இருக்கவில்லை.
இந்த விவகாரத்தில் முறையான மற்றும் நியாயமான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.” – என்றார்.
