தலங்கமயில் துப்பாக்கி, கத்தி முனையில் பாரிய கொள்ளை! – 6 கோடி ரூபாவும் தங்க நகைகளும் அபகரிப்பு.

கொழும்பு – தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைவத்துகொட, பன்னிபிட்டிய வீதியில் அமைந்துள்ள ‘நியூ செரேன்யா டிராவல்ஸ் அண்ட் டூர்ஸ்’ எனும் விமான பயணச்சீட்டு மற்றும் விசா வழங்கும் நிறுவனத்தில் பாரிய கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெள்ளை நிற ஆல்டோ ரக காரில் வந்த நான்கு பேர் கொண்ட ஆயுதம் ஏந்திய கும்பலே இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.

நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் நேற்றுமுன்தினம் மாலை அலுவலகத்தில் இருந்தவேளையில், திடீரென அங்கு அத்துமீறி நுழைந்த குற்றவாளிகள் கத்தி மற்றும் கூர்மையான ஆயுதங்களைக் காட்டி அவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.

நிறுவனத்துக்குச் சொந்தமான சுமார் 6 கோடி ரூபா ரொக்கப் பணம் மற்றும் உரிமையாளர் அணிந்திருந்த 4 தங்கச் சங்கிலிகள், 3 தங்க மோதிரங்கள் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

கொள்ளைச் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர்கள் தாம் வந்த காரிலேயே பன்னிபிட்டிய திசையை நோக்கித் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து தலங்கம பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், தப்பியோடியவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.