தனியாளாக ஆற்றைச் சுத்தம் செய்த மத்திய பிரதேச இளைஞர்! நெதர்லாந்து நிறுவனத்தில் தேடி வந்த வேலைவாய்ப்பு!

போபால்,

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் செய்த நற்செயலுக்காக வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சுரேந்திர சிங் சவுத்ரி (வயது 20). இவர் சமூக வலைதளங்களில் பிட்டு தபாஹி என்று பரவலாக அறியப்படுகிறார்.பிட்டு தனது சொந்த ஊரான பியாவோராவில் முற்றிலும் மாசடைந்து, குப்பைக் காடாக காட்சியளித்த அஜ்னார் ஆற்றை அரசு அல்லது உள்ளூர் நிர்வாகத்தின் எந்தவொரு உதவியுமின்றி, தனது சொந்த சேமிப்பைக் கொண்டு தனியாளாகச் சுத்தம் செய்து சாதித்துள்ளார்.

குப்பைகள் அகற்றம் -தோல் நோய்
அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று காத்திருக்காமல், கடந்த ஜனவரி மாதம் முதல் தினமும் பல மணி நேரங்கள் ஆற்றில் இறங்கி பிளாஸ்டிக் கழிவுகள், பாசிகள் மற்றும் இரசாயனக் கழிவுகளை அகற்றி வந்துள்ளார். நச்சுத்தன்மை வாய்ந்த தண்ணீரில் தொடர்ந்து வேலை செய்ததால் இவருக்குக் கைகால்களில் கடுமையான தோல் அலர்ஜி ஏற்பட்ட போதிலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆற்றின் பெரும் பகுதியைத் தூய்மைப்படுத்தியுள்ளார். இவரது இந்த அசாத்திய முயற்சியைப் பாராட்டிய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, இவரைத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து ஊக்கப்படுத்தியிருந்தார்.

சர்வதேச அளவில் தேடி வந்த வேலைவாய்ப்பு
பிட்டு தபாஹியின் இந்த நற்செயல் மற்றும் ஆற்றின் வியக்கத்தக்க மாற்றத்தைக் காட்டும் வீடியோக்கள் உலகளவில் வைரலாகின. நெதர்லாந்தைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் அமைப்பான ஓஷன் கிளீனப் நிறுவனத்தின் நிறுவனரும் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஒ) போயன் ஸ்லாட் , பிட்டுவின் அசாத்திய உழைப்பைக் கண்டு வியந்து, நேரடியாகத் தனது எக்ஸ் தளத்தில், “எங்களுடன் வந்து இணைந்து பணியாற்றுங்கள்” என்று நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாரப்பூர்வமாக பாராட்டி வேலைவாய்ப்பு அழைப்பு விடுத்துள்ளார்.

எந்தவித பின்னணியும் வசதியும் இல்லாத ஒரு கிராமத்து இளைஞனின் நற்செயலுக்கு, உலகத் தரம் வாய்ந்த ஒரு நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.