யாழ். மறைமாவட்ட புதிய ஆயரைச் சந்தித்த தமிழரசுக் கட்சி எம்.பி. சிவஞானம் சிறீதரன்!

யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்றுள்ள பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நீதியை நிலைநாட்டுதல் மற்றும் அதற்கான சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீட்டைப் பெறுதல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

மேலும், மனித உரிமைகளுக்குப் புறம்பான பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதனால் தமிழ் இளைஞர்களும் மக்களும் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மற்றும் அநீதியான கைதுகளை நிறுத்துவதற்கான முயற்சிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், பல தசாப்தங்களாகத் தீர்வுமின்றித் தொடரும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு, கௌரவமான மற்றும் நிரந்தரமான அரசியல் தீர்வொன்றைப் பெறுவது தொடர்பிலும், யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்தும் தொடரும் காணிப் பறிப்பு, உள்ளக இடப்பெயர்வுகள், வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு மற்றும் வவுனியாவில் முன்னெடுக்கப்படும் கீழ மல்வத்து ஓயா சிங்களமயமாக்கல் திட்டம் குறித்தும் ஆயரிடம் விளக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.