இரண்டு ஆண்டுகளில் மக்கள் நல்வாழ்வுக்காக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை!

தேசிய மக்கள் சக்தி அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா குற்றம் சாட்டினார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“தேசிய மக்கள் சக்தி அரசு நாடு முழுவதும் தொடர் கூட்டங்களை நடத்தி வருகின்றது. இருப்பினும், இந்த இரண்டு ஆண்டுகளில் அமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்மை ஏற்பட்டுள்ளதே தவிர, நாட்டுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.

ஆட்சிக்கு வருவதற்கு முன் நெல்லுக்கு 152 ரூபா சான்றிதழ் விலை வழங்கப்பட வேண்டும் எனப் போராடிய ஜே.வி.பி., ஆட்சிக்கு வந்தபின் 120 ரூபா விலையை நிர்ணயித்ததுடன், அந்த விலையில்கூட நெல்லைக் கொள்முதல் செய்ய எவ்விதத் திட்டமும் வைத்திருக்கவில்லை. அரிசி மாஃபியாவை ஒழிப்பதாகக் கூறியும், அரிசியை இறக்குமதி செய்ய மாட்டோம் என உறுதியளித்தும் அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

அத்தியாவசிய உணவுகளுக்கான வற் வரியை நீக்குவதாகவும், மின்சாரக் கட்டணத்தை 30 முதல் 35 சதவீதம் வரை குறைப்பதாகவும், எரிபொருளுக்கான வற் வரியை நீக்கிக் குறைந்த விலையில் வழங்குவதாகவும் கூறினர். ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும் அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகள் குறைக்கப்படவில்லை. இளைஞர்களுக்கு ஜப்பானிய மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுத் தருவதாகக் கனவு காட்டிய ஜனாதிபதி, இன்று ஒரு சைக்கிளைக்கூட வாங்க முடியாத நிலையையே உருவாக்கியுள்ளார்.

வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், அதன் பலன் பணக்காரர்களுக்கே சென்று சேர்ந்தது. புதிய 50 சதவீத குத்தகை கட்டுப்பாட்டு விதிமுறை காரணமாக, சாதாரண நடுத்தர வர்க்கத்தினரால் ஒரு சிறிய கார், த்ரீவீலர் அல்லது மோட்டார் சைக்கிளைக்கூட தவணை முறையில் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்தவொரு அபிவிருத்தியும் நடக்கவில்லை; ‘டித்வா’ புயலால் சேதமடைந்த ரயில் பாதையைக் கூட அரசால் இன்னும் சீரமைக்க முடியவில்லை.

அனுமதியின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை மற்றும் 19 தரமற்ற நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டதில் இடம்பெற்ற பெருவாரியான ஊழல்கள் குறித்து அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இலவச சுகாதார அமைப்பைப் பாதுகாப்பதாகக் கூறிய அரசு, மருத்துவமனைகளில் மருந்துத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தித் துறையை முடக்கியுள்ளது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எந்தவித அரச அதிகாரமும் நிதியுமின்றி மருத்துவமனைகளுக்குத் தேவையான உபகரணங்களையும் மருந்துகளையும் வழங்கி உதவினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறும், இணையவழி பாதுகாப்புச் சட்டம் மற்றும் சிவில், அரசியல் உரிமைகள் சட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறும் மனித உரிமைகள் பேரவை அரசுக்கு அறிவித்துள்ளது. மேலும், 22ஆவது அரசமைப்புத் திருத்தம், நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளதால், அரசு இந்த அறிக்கைக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டும்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.