பருத்தித்துறையில் மூன்று புதிய வீடுகள் கையளிப்பு!
வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சால் வழங்கப்பட்ட 2 மில்லியன் ரூபா பெறுமதியான 3 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ந. திருலிங்கநாதன் தலைமையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்றது.
இந்த வீடுகள் ஜே/392 வல்வெட்டித்துறை தென்கிழக்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள திருமதி. சிவாஜி நந்தினி, ஜே/395 பொலிகண்டி தெற்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள ஆறுமுகம் மனோகரன், ஜே/417 துன்னாலை வடக்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள இராசா சசிகுமார் ஆகிய பயனாளிகளுக்கே வழங்கி வைக்கப்பட்டன.
இந்த வீடுகளைப் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர்.
இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன், கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் எஸ்.கபிலன், பருத்தித்துறை பிரதேச செயலர் ந.திருலிங்கநாதன், உதவிப் பிரதேச செயலர் பசுபதி தயானந்தன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பிரஜாசக்தி உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






