பலாலி மக்களின் காணி உரிமைப் போர் 13ஆவது வாரமாகவும் இன்று தொடர்ச்சி!
யாழ். வலிகாமம் வடக்கு பலாலி பகுதியில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை மீளக் கையளித்து, சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, காணி இழந்த பலாலி மக்கள் 13 ஆவது வாரமாகவும் தொடர் கவனவீர்ப்புப் போராட்டத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுத்தனர்.
பலாலி சந்திப் பகுதியில் நடைபெற்ற இந்த அமைதிவழிப் போராட்டத்தில், பல தசாப்தங்களாகத் தமது பூர்வீக நிலங்களையும் வீடுகளையும் இழந்து வாழும் மக்கள் கலந்துகொண்டு, காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே, அது எப்படி உங்களுடையதாகும்?”, “எங்கள் பூர்வீக நிலங்களை எங்களிடம் ஒப்படை!”, “மக்களின் நிலம் மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே?” உள்ளிட்ட பல கோஷங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பல தசாப்தங்களாகத் தமது சொந்தக் காணிகளை இழந்து, நலன்புரி முகாம்கள், வாடகை வீடுகள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகப் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கவலை தெரிவித்தனர்.
மேலும், தமது காணிகளை மீள வழங்குவதாகத் தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகள் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதேவேளை, தமது பூர்வீகக் காணிகளை விடுவிப்பது வெறுமனே காணி உரிமை தொடர்பான பிரச்சினை அல்ல என்றும், அது தமது வாழ்வுரிமை, வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால சந்ததிகளின் உரிமையுடன் தொடர்புடையது என்றும் மக்கள் சுட்டிக்காட்டினர்.
இதனிடையே, பலாலி கிழக்கு உள்ளிட்ட சில பகுதிகளைச் செப்டெம்பர் மாதத்தில் பொதுமக்களின் மீள்குடியேற்றத்துக்காக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த நடவடிக்கைகள் தாமதமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் போராடும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.



